Thursday, November 03, 2016

சீம்பு எனப்படும் தேங்காய்ப்பூ
சாதாரணமாகத் தேங்காயை உடைத்தால் இரண்டு அரைக்கோள வடிவ தேங்காய் மூடிகள் கிடைக்கும். வெள்ளை வெளேரென்று பளிச்சிட்டுச் சிரிக்கும். தேங்காய் நன்றாக முற்றிய பிறகு முளைவிட ஆரம்பிக்கும். தேங்காயின் ஒரு மூடியில் அதன் கண் என்று சொல்லப்படும் துளையை அழுத்தினால் அதிலிருந்து துவரம்பருப்பு அளவில் வரும். அதைத் தின்றால் சுவையாக இருக்கும்.

நன்கு முற்றிய தேங்காயை அப்படியே சில நாட்களுக்கு விட்டுவிட்டால் சிறிய அளவில் குறுத்துவிடத் தொடங்கும். தேங்காயின் உள்ளே அந்தக் குருத்து முட்டை போன்ற வடிவில் வளரத் தொடங்கும்... ஒரு கட்டத்தில் அது தேங்காய் முழுவதும் அடைத்துக் கொள்ளும். அந்தக் காலக்கட்டத்தில் தேங்காயை உடைத்தால் அதனுள் தக்கை போன்று உருண்டை வடிவத்தில் இளம் மஞ்சள் கலந்த வெண்மை நிறத்தில் இருப்பதே சீம்பு எனப்படும். சாதாரணமாக இதைத் தேங்காய்ப்பூ என்றுதான் சொல்வார்கள். 03/11/2016 இன்றுதான் முகநூல் தோழி பரிமளாதேவி மூலம் இதன் பெயர் சீம்பு என்று தெரிந்து கொண்டேன். நன்றி.

Wednesday, September 21, 2016

செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி....

21/09/2016  

கொஞ்ச காலத்திற்கு முன்னால் நான் சிறுவனாக இருந்தபோது வானொலியில் பாடல் கேட்பதும் கேட்டுக் கொண்டே குறிப்பேட்டில் அந்தப் பாடலை அதே வேகத்தில் எழுதுவதும் பழக்கம். 

ஒரு செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி வரை எனக்கு அந்த முழுப்பாடலும் தெரியாது. வானொலியிலும் முழுப்பாடலை ஒலிபரப்பிக் கேட்டதில்லை... 

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
இங்கு நீயொரு பாதி நானொரு பாதி
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
ஒரு தெய்வமில்லமல் கோவிலுமில்லை
ஒரு கோவில்லாமல் தீபமுமில்லை
நீ அந்தக் கோவில் நான் அங்கு தீபம்
தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
அந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி வரை முழுப்பாடல் இவ்வளவுதான் என்று நினைத்திருந்தேன்...
காலை 7.00 என்னிடம் ஒரு தாள் வந்து சேர்ந்தது. அந்தத் தாளில் இந்தப் பாடல் வரிகள். ஆனால் மேலும் ஒரு பத்தி
என் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே - நான்
வாரியணைத்தேன் ஆசையினாலே
நீ தருவயோ நான் தருவேனோ
யார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல 
அதிகமாக இருந்தது...

எனக்கு ஒன்றும் புரியவில்லை... பிறகுதான் தெரிந்தது அந்தத் தாளில் எழுதியிருந்ததுதான் முழுப்பாடல் என்று.

இந்த நாளில்தான் எனக்குத் தெரிந்தது... நீயொரு பாதி நானொரு பாதி என்று.... 

Sunday, July 10, 2016

தரமான தஞ்சாவூர் செக்கெண்ணெய்.


தஞ்சாவூர் செக்கெண்ணெய் தோன்றிய வரலாறு...

     இது என் குடும்பத்தினருக்காக, தொடங்கிய முயற்சி... எதிர்காலத் தலைமுறை நலமாக வாழவேண்டும்... நம் பிள்ளைகளுக்கு நாம் நல்லனவற்றைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவே இந்த எண்ணெய் ஆட்டும் முயற்சி.

நாம் நம் பாரம்பரியத்தை மறந்ததால் பல்வேறு இன்னல்களை அடைந்து கொண்டுள்ளோம்... வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு என்பதை மறந்தோம். வாணியனுக்குக் கொடுப்பதை மறந்ததால் இன்று வைத்தியனுக்கு வாரி வழங்கிக் கொண்டுள்ளோம்.

இந்த நிலையை மாற்றவேண்டும் என்று நெடுநாளாக எண்ணிக் கொண்டிருந்தேன்... இன்று நிறைவேறியது. தஞ்சாவூர் செக்கு எண்ணெய். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். ஆம் என் குடும்பத்திற்காகப் பார்த்துப் பார்த்துப் பக்குவமாகத் தயாரிக்கப்பட்டதுதான் இந்த நல்லெண்ணெயும், தேங்காயெண்ணெயும்.

என்னுடைய நண்பர் செந்தில் வீட்டில் விளைந்த பல ஆண்டுகளாக செயற்கை உரம் எதுவும் போடாமல் விளைந்த தேங்காய்க் கொப்பரையில் பார்த்துப் பார்த்துப் பக்குவமாகக் காயவைத்து தேங்காயெண்ணெய் ஆட்டி எடுக்கப்பட்டது.
சேலத்தில் நண்பர் செல்வமுரளியிடமிருந்து தரமான நல்ல எள் வாங்கி ஆட்டி எடுக்கப்பட்டது நல்லெண்ணெய்.

எல்லாவற்றையும்விட இணையத்தில் நான் பார்த்த மற்ற அனைவரையும் விட எவ்வளவு விலை குறைவாகக் கொடுக்க முடியுமோ அந்த அளவு குறைவாகக் கொடுக்க முயன்றுள்ளேன்.

இது என்னுடைய முதல் முயற்சி... உங்களின் மேலான ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இறங்கியுள்ளேன்.

அடுத்தமுறை கட்டாயம் இதைவிட இன்னும் குறைவான விலையில் கொடுப்பேன் என்று உறுதிகூறி உங்களின் மேலான ஆதரவிற்கு நன்றி கூறிக் கொள்கின்றேன்.

விலைவிவரம் அனுப்பும் செலவு சேர்த்து.

நல்லெண்ணெய் கருப்பட்டி கலந்து ஆட்டியது 1லி   = ரூ.295/-
தேங்காய் எண்ணெய் 1லி                              = ரூ.200/-
---------------------------------
தஞ்சாவூரில் உள்ளவர்கள் நேரில் வந்து வாங்கிக் கொண்டால் விலையில் பத்து ரூபாய் குறைவு.

பணம் அனுப்ப வேண்டிய வங்கி விவரம்.

ICICI BANK SAVINGS A/C NO 612801076639
Thanjavur IFSC Code: ICIC0006128

(தஞ்சாவூர் தவிர்த்த பிற ஊரில் உள்ளவர்கள் குறைந்தது மூன்று அல்லது ஐந்து லிட்டராக வாங்கினால் அனுப்புவது நல்லது. ஒரு லிட்டர் என்றால் கொரியர்காரர்கள் பொறுப்பில்லாமல் தூக்கிப் போட்டுவிடுகின்றனர்.)        (அண்டை மாநிலங்களுக்கு ஒரு லிட்டர் அல்லது ஒரு கிலோவுக்கு கூரியர் செலவு 30 ரூபாய் கூடுதலாக வரும்)


பொத்தகத் தேனீலாங் மிஸ்சிங் லிங் - நூலைக் கண்டுபிடித்து அதைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பவர் தர்சினி சூரியகலா.

பொத்தகத் தேனீ! இந்தத் தலைப்பு! இந்த உவமை இவருக்கு மிகச் சரியாகப் பொருந்தும்... பெங்களூரில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர் நூல்கள் என்றால் பேயாய் அலைவார். யாருக்கேனும் நூல்கள் தேவைப்பட்டால் இவரை அணுகலாம்... நூல்கள் எந்த மூலைமுடுக்குகளில் இருந்தாலும் இவரிடமிருந்து தப்பமுடியாது... 

இவர் மிகப் பெரிய வலைப் பிண்ணலை உருவாக்கி வைத்துள்ளார். யாரைப் பிடித்தால் எப்படி காரியத்தைச் சாதிக்கலாம் என்று மிகத் தெளிவாகத் தெரிந்து வைத்துள்ளார்.

கடந்த 2013-ஆண்டு சிங்கப்பூர் தமிழாசியர்கள் மதுரைக்குக் கற்றல் பயணம் மேற்கொண்டோம். அப்போது சிறப்புப் பேச்சாளர்களாக ஆயிசா புகழ் இரா.நடராசன், மாலன் போன்றோர் வந்து உரையாற்றினார்கள். அப்போது ஆயிசா கதையை ஆசிரியர்கள் அனைவரும் படித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினோம். குறைந்தது உடனடியா 20 பொத்தகங்கள் தேவைப்படும்... மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர்களின் உதவியோடு பொத்தகக் கடைகளுக்கு அலைந்தேன். பலகடைகளில் அந்த நூலே தெரியவில்லை... தெரிந்த கடைகளில் நூல்கள் இல்லை... ஒன்றும் புரியாத நிலை. உடன் நினைவுக்கு வந்தவர் ஒருவர்தான். ஆனால் அவர் இருப்பதோ பெங்களூரில். நாங்கள் தமிழகத்தில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில். எதுவும் யோசிக்கவில்லை. ஒரே ஒரு முறை அவர் எண்ணை அழுத்தி நிறுத்திவிட்டேன்... (உடனே அழைப்பு வரும் என்று தெரியும்)

உரையாடல் இதுதான்....

- எனக்கு ஆயிசா நூல்கள் 20 வேண்டும். உடனே... என்ன செய்வியோ      தெரியாது. 
-  அவ்வளவுதானே... சரி.. 

-   பத்து நிமிடத்தில் மீண்டும் அலைபேசி ஒலித்தது

-  என்ன?
- பத்து நூல்கள் போதுமா?
- இல்லை 20 கட்டாயம் வேண்டும். (இணைப்பைத் துண்டித்தேன்)

   பத்து நிமிடத்தில் மீண்டும் அழைப்பு. 

- உங்கள் எண்ணை கொடுத்துள்ளேன். காலை உங்களை                             அழைப்பார்கள். 

மறுநாள் காலை நாங்கள் தங்கியிருந்த விடுதியில் என்னிடம் ஒரு பொதியை ஒப்படைத்தார்கள்... திறந்து பார்க்காமலேயே அது பொத்தகம் என்று தெரிந்தது... மதுரையில் இருக்கும் ஒருவரிடமே சொல்லி நூல்கள் எனக்குக் கிடைக்க ஏற்பாடு செய்திருந்தார். அனைவருக்கும் ஒரு பிரதியைக் கொடுத்தேன்... கையில் நூலைப் பெற்றுக் கொண்டவுடன் அனைவருக்கும் அதிர்ச்சியும் ஆச்சரியமும்.
கையில் ஆயிசா நூலுடன் சிங்கபூர்த் தமிழாசிரியர்கள்


எப்படிங்க? நேற்று சொல்லி இன்று கையில் நூல்... எனக்கு இதில் ஆச்சரியம் இல்லை ஏனென்றால் எனக்கு அவரைப்பற்றித் தெரியும்.
இதுமட்டுமல்ல... 

லாங் மிஸ்சிங் லிங் 1931-இல் எழுதப்பட்ட ஆங்கிலநூல். இந்த நூலை ஒருசில ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருந்தேன். என்னுடைய ஆசிரியர் முனைவர் பா.இறையரசன் இதனைக் கேட்டார்... தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளைத் தேடிக் கொண்டிருக்கும் ஒரு புகழ்பெற்ற மனிதரிடம் இந்த நூலுக்காகப் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தும் அந்த நூல் கிடைக்கவில்லை என்பதை அறிந்தேன். 

இலண்டன் நூலகத்தில் உள்ளது என்று நண்பர்களின் உதவியால் அறிந்தேன். ஆனாலும் நூலைப் பார்க்கக் கூட முடியவில்லை. அமேசான் நிறுவனம் நூல் உள்ளதாக விளம்பரம் செய்துள்ளது. ஆனால் அவர்களிடம் நூல் இல்லை... 

இவரிடம் சொல்லிவைத்திருந்தேன்... கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் எப்படியும் நூலினைக் கண்டுபிடித்துத் தருகின்றேன் என்றார்.

இதற்கிடையில் அ.மாதவையாவின் கிளாரிந்தா நூல்பற்றிய ஒரு குறிப்பினை முகநூலில் படித்தேன். தஞ்சாவூரில் நிகழ்ந்த வரலாற்றுச் சம்பவம். நூலைப் படிக்க ஆவல் ஏற்பட்டது. முகநூலில் பகிர்ந்தேன்... சிங்கப்பூர் தமிழாசிரியர்கள் ஒருசிலர் தங்களுக்கும் நூல் வேண்டும் என்று கேட்டனர். 
பெங்களூருக்கு ஒரு அழைப்பு. நான்கு நாளில் வீட்டில் கிளாரிந்தா. 

இப்படி நூல்கள் தொடர்பாக என்ன சொன்னாலும் உடனே எப்பாடு பட்டாவது நிறைவேற்றிவிடுவார்... 

இப்படி கிடைக்காத பல அரிய நூல்களைத் தேடித் தொகுப்பதை மிகவும் விரும்புபவர். 

"மலர்களின் வாசனையைவிட நூல்களின் வாசனை எனக்கு மிகவும் பிடிக்கும்" என்று கூறும் இவர், "பயணச் செலவைக் கொடுத்தால் போதும், கிடைப்பதற்கு அரிது என்ற நூல்களை எல்லாம் தேடிச் சேகரித்துக் கொடுப்பேன் என்று கூறுகின்றார். 

ஆச்சரியமானவர். அதிசயமானவரும் கூட... அவர்தான் தர்சினி சூரியகலா.