Monday, May 01, 2017

மடையனின் பிள்ளைகளும் மடையர்களே!

சற்றுமுன்னர் ஒருசில சொல்ல முடியாத காரணங்களால் என் மகளும் மகனும் தாங்களும் மடையர்கள் என்பதை மெய்பிக்கும் முயற்சியில் இறங்கியிருந்தனர். நான் சிறிது கோபமாகவே இருந்தேன். ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் ஒரு பக்கம் சற்று கோபமாகத்தான் இருந்தேன்...

வலிய சில காரணங்களை ஏற்படுத்திக் கொண்டு அவர்கள் அறியாதவாறு கண்காணித்தேன். மடையர்களாகிவிடுவார்களோ என்று எனக்கு உள்ளூர சற்றுப் பயமே... என் அச்சம் உறுதியானது. என் மகன் கொதிக்கும் குழம்பைக் கரண்டியில் எடுத்துக் கொண்டு என் அருகில் வந்தான்...
என்னிடம் தங்களின் திறமையை மெய்பித்து எப்படியும் பாராட்டு வாங்கிவிட வேண்டும் என்பதில் முனைப்பாயிருந்தனர் என் மக்கள்.
கொதிக்கும் பருப்புக் குழம்பின் மனம் மெல்ல என்னை இழுத்தது... நான் என் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டவிரும்பவில்லை.
கையில் கரண்டி, கரண்டியில் கொதிக்கும் குழம்பு.

அப்பா என்று என் மகன் அழைத்தான். அந்த அழைப்பு வழக்கமான அழைப்பல்ல. முகத்தை நேராகக் காட்ட எனக்குச் சிறிது தயக்கம்தான்.

என்ன? - சற்று அதட்டலாகக் கேட்பது போல் நடித்தேன்.
கரண்டியில் இருந்த குழம்பை வாயால் நான்கைந்து முறை ஊதி ஊதி... அதிலும் மனநிறைவடையாமல் என் மகன் அவனுடைய கையில் ஊற்றிப் பார்த்து சூடு ஆறிவிட்டதை உறுதி செய்துகொண்டு என் கையில் கரண்டியில் மீதமிருந்த குழம்பை ஊற்றிவிட்டு எதிர்பார்ப்போடு என் முகத்தைப் பார்த்தான்.
ம்...ம்... நல்லாருக்கு என்றவுடன் மெல்லிய புன்னகையோடு வெற்றி பெற்ற பெருமிதத்தோடு நகர்ந்தான்.

மகளோ எதையுமே காட்டிக் கொள்ளவில்லை... ஒருவித அலட்சியம்... ம்... பருப்புக் குழம்பு வைப்பது என்ன பெரிய கம்பசித்திரமா என்பது போல... அமைதியாக நின்றாள்...
ம்... நான் அமைதியாக நகர்ந்து வந்துவிட்டேன். மடையனின் பிள்ளைகளும் மடையர்களே...
-------------------
(இதில் ஒரு முக்கியமான என் மனத்தைத் தொட்ட பகுதி என்னவெனில்... எனக்குக் கை சுட்டுவிடக்கூடாது என்று எண்ணி என் மகன் தன் கைகளில் ஊற்றிப் பார்த்தபின்னர் என் கையில் ஊற்றிய பாங்கு... )

Saturday, March 11, 2017

வாட்போர்....

இன்று யாரும் எதிர்பார்க்கவில்லை... திட்டமிட்டதைவிட அரைமணி நேரம் தாமதமாகத்தான் போர்க்களத்தினை அடைந்தோம். தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்தோம்... இன்று முழுவதும் வாட்போர்தான் அவரவர் போருக்குத் தயாரானோம்... தக்க உடைகளணிந்து வாட்களைச் சோதனையிட்டு... எல்லாம் முடிந்தது.




தந்தையும் பிள்ளையும் வாட்போரிடுவது என்றுதான் முதலில் சொன்னார்கள். 

பிறகு பிள்ளைகள் ஒருபுறம் தந்தையர் ஒருபுறம் போரிட்டோம்... வெற்றி பெற்ற இரண்டு குழுக்களும் இறுதியாக மோதின...
என்னோடு மோதுவதற்குத் தயாராக இருந்தவர் ஒரு சீன ஆசிரியர். அறிவிப்புக்காகக் காத்திருந்தோம்... அறிவிப்பும் வந்தது... போர் தொடங்கியது.
எதிராளி திறமையானவர்தான். எதிர்ப்பு கடுமையாகத்தான் இருந்தது. முதலில் சற்று யோசித்தேன். எதிரி என வந்தபிறகு யோசிக்கக்கூடாது...
என் மனக்கண் முன்னால் அரசிளங்குமரி ம.கோ.இராவும் நம்பியாரும் வந்தனர்... வாட்போரின் திசை திரும்பியது. டன் டணார், டிங், டிங்...டங்... டிங், டங், டணார், டிங்ங்ங்ங்......

அந்த அணியினரைவிட நான் பத்து புள்ளிகள் அதிகம் பெற்றேன்... போர் முடிந்தது என அறிவிக்கப்பட்டது. இருவரும் கைகுலுக்கி களத்தைவிட்டு வெளியேறி... போருடைகளைக் களைந்தோம்...



குழுவாகப் படம் பிடித்துவிட்டு வெளியே வந்தோம். தந்தை பிள்ளைகளுக்கான நிகழ்ச்சியை வெற்றிகரமாக மகிழ்ச்சியாக முடித்த நிறைவோடு மாணவர்களையும் அவர்களின் தந்தையர்களையும் அனுப்பிவிட்டு வீட்டுக்கு என் மகனுடன் வந்தேன்... நல்லவேளையாக எனக்கும் என் மகனுக்கும் கத்திச்சண்டை நடைபெறவில்லை... 

Wednesday, March 08, 2017

அகில உலக மகளிர் நாளும் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரியும்

நான் ஐகப் என்ற மாணவர் அமைப்பில் இருந்த காலகட்டம். தமிழகம் முழுக்க உள்ள கல்லூரிகளுக்குச் சென்று விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தேன். அந்த சந்தர்ப்பத்தில் அகில உலக மகளிர் நாளுக்காக என்னுடைய தஞ்சாவூரிலுள்ள குந்தவை நாச்சியார் மகளிர் கலைக் கல்லூரியில் ஏதாவது செய்யலாம் என்ற எண்ணம் வந்தது... அந்தக் கல்லூரிதான் தஞ்சாவூரில் பெயர் பெற்ற பெண்கள் கல்லூரி... அதுமட்டுமல்ல அங்கு என்னுடைய அன்பிற்குரியவள் படித்துவந்தாள். அந்தத் துணிவில்தான் அந்தக் கல்லூரி செல்ல ஆசைப்பட்டேன்.
பொதுவாக என்னைப்போன்ற அழகும் அறிவும் ஒருங்கேபெற்ற இளைஞர்கள் அந்தக் கல்லூரிக்குள் சென்று வருவது சற்று ஆபத்தானதும் கூட...
முன்கூட்டியே அந்தப் பெண்ணிடம் அனுமதி கேட்டு நேரத்தை முடிவு செய்து கொண்டேன். உள்ளுக்குள் சற்று அச்சவுணர்வு இருந்தாலும் வெளியில் யாராலும் கண்டுபிடித்திருக்கவே முடியாது.

குறிப்பிட்ட நேரத்தில் கல்லூரிக்குள் நுழைந்தேன்... மெல்லிய சீட்டி ஒலி... கேலி, கிண்டல் வினோத ஒலிக் குறிப்புகள்...  என்னை நோக்கித்தான்... ஆங்காங்கே மர நிழல்களில் அழகிய ரோசாக்களும், மல்லிகைகளும். சாமந்திப் பூக்களை... பூக்களை மட்டுமே நட்டு வைத்ததைப் போன்று பெண்கள் அமர்ந்திருந்தனர்.
நேரே அலுவலகத்திற்குச் சென்று பெயரைச் சொல்லி யாரைப் பார்க்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டேன். சற்று நேரத்தில் மெல்லிய கொலுசொலி... ஒவ்வொரு நாளும் கேட்கும் ஒலி.. சட்டென ஒலிவந்த திசையை நோக்குவதற்குள் ஒளியென என் அருகில் தன் தோழிகளுடன்.
சரி கல்லூரி முதல்வரைப் பார்த்துப் பேசுவதற்கு முன் கீழே போய்வருவோமா என்றாள். குறிப்பறிந்து கீழே சென்றோம். கல்லூரி உணவகத்தில் சூடான தேநீரும், மசால்வடையும் எங்களைத் தேடி வந்தன. எல்லாமே சொல்லி வைத்தது போன்று நிகழ்ந்தது.
வடை சாப்பிடுமுன் ஒன்றைக் குறிப்பிட வேண்டும்... நான் தனியாக வந்தபோது என்னைக் கேலி செய்தவர்கள் இப்போது ஒரு சிறு ஓசைகூட எழுப்பவில்லை... அப்போதுதான் அவளுக்கு அந்தக் கல்லூரியில் இருந்த மதிப்பை அறிந்தேன்.
வடை சாப்பிட்டுத் தேநீர் அருந்தியபின் ஒப்புக்காக காசு கொடுக்க முயன்றேன். வேண்டாம் வாங்க என்ற ஒரே வார்த்தை... மறுபேச்சு பேசவில்லை பின்தொடர்ந்தேன்.
இரண்டாம் தளத்திலிருந்த கல்லூரி முதல்வர் அறைக்குச் சென்றோம். வருகை தெரிவிக்கப்பட்டது. முதல்வர் அழைத்தார். உள்ளே சென்று அமர்ந்தோம். என்னைப்பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டு மகளிர் நாளுக்காக சில நடவடிக்கைகளைச் செய்ய விரும்புவதைத் தெரிவித்தேன். அனுமதி கொடுத்தார். உடனிருந்தவர்களின் சிறப்பது என்பதைச் சொல்லத் தேவையில்லை... கல்லூரி மாணவத் தலைவி மாதங்கியும், பூங்கொடியும் உடனிருந்தனர். கல்லூரிக்குள் பூங்கொடிக்கு இருந்த செல்வாக்கு மிகவும் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது
பெண்களுக்கான உரிமைகள், பெண் கல்வி முக்கியத்துவம், என ஒருசில சுவரொட்டிகள், துண்டறிக்கைகள். கொடுத்துவிட்டு மாமரத்து நிழலில் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு நன்றி கூறி விடைபெற்றேன்.
சற்றுதூரம் துணைக்கு வரும்படி கேட்டுக் கொண்டேன்... மீண்டும் கேலி கிண்டல் செய்வார்கள் என்ற பயத்தில் இல்லை... இன்னும் சிறிது நேரம் பேசலாமே என்றுதான்...
நான் அந்தக் கல்லூரிக்குள் சென்ற முதல் நிகழ்வு இதுதான். அதன்பிறகு இன்றுவரை அங்கு செல்லும் சந்தர்ப்பம் ஏதும் அமையவில்லை...