Saturday, September 22, 2018

பூங்கொடி...

பொழுது விடிவதற்கும், இருள் விலகுவதற்குமான ஒரு இடைப்பட்ட நேரம். இரசம் போன கண்ணாடி வழியாகப் பார்ப்பது போன்ற தோற்றத்தில் தூரத்து மரங்களும், காவல் துறை கண்காணிப்பாளர் வீடும், அதைத்தாண்டி அந்த இரண்டு தாணிக்காய் மரங்களும்  சற்று மங்கலாகத் தெரிந்தன.

தாணிக்காய் மரங்களின் அருகிலிருந்த அந்த மாணவியர் விடுதியின் தூக்கக் கலக்கம் இன்னும் தீரவில்லை. அவனைச்சுற்றி அனைத்தும் உறக்கத்தில் இருந்தன. அவனுக்கு மட்டும் உறக்கம் ஓடிப்போக விழிப்பு விழித்துக் கொண்டது.

தங்களில் இளமையோடு உறக்கத்தையும் தொலைத்த முதிர்கன்னிகள் 5.30 மணிக்கே மெல்ல செபமாலையை உருட்டிக் கொண்டே கோவிலுக்கு வரத்தொடங்கிவிடுவார்கள். அவளுந்தான்.. 

அவர்கள் வருவதற்கு முன் கோவிலைச்சுற்றி வைக்கப்பட்டிருந்த தென்னம்பிள்ளைகளுக்குத் தண்ணீர் ஊற்றி முடித்துவிடவேண்டும் என்பது அவனுக்குள் எழுதப்படாத சட்டமாக ஒட்டிக் கொண்டிருந்தது.