Sunday, July 10, 2016

பொத்தகத் தேனீ



லாங் மிஸ்சிங் லிங் - நூலைக் கண்டுபிடித்து அதைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பவர் தர்சினி சூரியகலா.

பொத்தகத் தேனீ! இந்தத் தலைப்பு! இந்த உவமை இவருக்கு மிகச் சரியாகப் பொருந்தும்... பெங்களூரில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர் நூல்கள் என்றால் பேயாய் அலைவார். யாருக்கேனும் நூல்கள் தேவைப்பட்டால் இவரை அணுகலாம்... நூல்கள் எந்த மூலைமுடுக்குகளில் இருந்தாலும் இவரிடமிருந்து தப்பமுடியாது... 

இவர் மிகப் பெரிய வலைப் பிண்ணலை உருவாக்கி வைத்துள்ளார். யாரைப் பிடித்தால் எப்படி காரியத்தைச் சாதிக்கலாம் என்று மிகத் தெளிவாகத் தெரிந்து வைத்துள்ளார்.

கடந்த 2013-ஆண்டு சிங்கப்பூர் தமிழாசியர்கள் மதுரைக்குக் கற்றல் பயணம் மேற்கொண்டோம். அப்போது சிறப்புப் பேச்சாளர்களாக ஆயிசா புகழ் இரா.நடராசன், மாலன் போன்றோர் வந்து உரையாற்றினார்கள். அப்போது ஆயிசா கதையை ஆசிரியர்கள் அனைவரும் படித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினோம். குறைந்தது உடனடியா 20 பொத்தகங்கள் தேவைப்படும்... மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர்களின் உதவியோடு பொத்தகக் கடைகளுக்கு அலைந்தேன். பலகடைகளில் அந்த நூலே தெரியவில்லை... தெரிந்த கடைகளில் நூல்கள் இல்லை... ஒன்றும் புரியாத நிலை. உடன் நினைவுக்கு வந்தவர் ஒருவர்தான். ஆனால் அவர் இருப்பதோ பெங்களூரில். நாங்கள் தமிழகத்தில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில். எதுவும் யோசிக்கவில்லை. ஒரே ஒரு முறை அவர் எண்ணை அழுத்தி நிறுத்திவிட்டேன்... (உடனே அழைப்பு வரும் என்று தெரியும்)

உரையாடல் இதுதான்....

- எனக்கு ஆயிசா நூல்கள் 20 வேண்டும். உடனே... என்ன செய்வியோ      தெரியாது. 
-  அவ்வளவுதானே... சரி.. 

-   பத்து நிமிடத்தில் மீண்டும் அலைபேசி ஒலித்தது

-  என்ன?
- பத்து நூல்கள் போதுமா?
- இல்லை 20 கட்டாயம் வேண்டும். (இணைப்பைத் துண்டித்தேன்)

   பத்து நிமிடத்தில் மீண்டும் அழைப்பு. 

- உங்கள் எண்ணை கொடுத்துள்ளேன். காலை உங்களை                             அழைப்பார்கள். 

மறுநாள் காலை நாங்கள் தங்கியிருந்த விடுதியில் என்னிடம் ஒரு பொதியை ஒப்படைத்தார்கள்... திறந்து பார்க்காமலேயே அது பொத்தகம் என்று தெரிந்தது... மதுரையில் இருக்கும் ஒருவரிடமே சொல்லி நூல்கள் எனக்குக் கிடைக்க ஏற்பாடு செய்திருந்தார். அனைவருக்கும் ஒரு பிரதியைக் கொடுத்தேன்... கையில் நூலைப் பெற்றுக் கொண்டவுடன் அனைவருக்கும் அதிர்ச்சியும் ஆச்சரியமும்.
கையில் ஆயிசா நூலுடன் சிங்கபூர்த் தமிழாசிரியர்கள்


எப்படிங்க? நேற்று சொல்லி இன்று கையில் நூல்... எனக்கு இதில் ஆச்சரியம் இல்லை ஏனென்றால் எனக்கு அவரைப்பற்றித் தெரியும்.
இதுமட்டுமல்ல... 

லாங் மிஸ்சிங் லிங் 1931-இல் எழுதப்பட்ட ஆங்கிலநூல். இந்த நூலை ஒருசில ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருந்தேன். என்னுடைய ஆசிரியர் முனைவர் பா.இறையரசன் இதனைக் கேட்டார்... தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளைத் தேடிக் கொண்டிருக்கும் ஒரு புகழ்பெற்ற மனிதரிடம் இந்த நூலுக்காகப் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தும் அந்த நூல் கிடைக்கவில்லை என்பதை அறிந்தேன். 

இலண்டன் நூலகத்தில் உள்ளது என்று நண்பர்களின் உதவியால் அறிந்தேன். ஆனாலும் நூலைப் பார்க்கக் கூட முடியவில்லை. அமேசான் நிறுவனம் நூல் உள்ளதாக விளம்பரம் செய்துள்ளது. ஆனால் அவர்களிடம் நூல் இல்லை... 

இவரிடம் சொல்லிவைத்திருந்தேன்... கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் எப்படியும் நூலினைக் கண்டுபிடித்துத் தருகின்றேன் என்றார்.

இதற்கிடையில் அ.மாதவையாவின் கிளாரிந்தா நூல்பற்றிய ஒரு குறிப்பினை முகநூலில் படித்தேன். தஞ்சாவூரில் நிகழ்ந்த வரலாற்றுச் சம்பவம். நூலைப் படிக்க ஆவல் ஏற்பட்டது. முகநூலில் பகிர்ந்தேன்... சிங்கப்பூர் தமிழாசிரியர்கள் ஒருசிலர் தங்களுக்கும் நூல் வேண்டும் என்று கேட்டனர். 
பெங்களூருக்கு ஒரு அழைப்பு. நான்கு நாளில் வீட்டில் கிளாரிந்தா. 

இப்படி நூல்கள் தொடர்பாக என்ன சொன்னாலும் உடனே எப்பாடு பட்டாவது நிறைவேற்றிவிடுவார்... 

இப்படி கிடைக்காத பல அரிய நூல்களைத் தேடித் தொகுப்பதை மிகவும் விரும்புபவர். 

"மலர்களின் வாசனையைவிட நூல்களின் வாசனை எனக்கு மிகவும் பிடிக்கும்" என்று கூறும் இவர், "பயணச் செலவைக் கொடுத்தால் போதும், கிடைப்பதற்கு அரிது என்ற நூல்களை எல்லாம் தேடிச் சேகரித்துக் கொடுப்பேன் என்று கூறுகின்றார். 

ஆச்சரியமானவர். அதிசயமானவரும் கூட... அவர்தான் தர்சினி சூரியகலா.


No comments: