Wednesday, March 08, 2017

அகில உலக மகளிர் நாளும் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரியும்

நான் ஐகப் என்ற மாணவர் அமைப்பில் இருந்த காலகட்டம். தமிழகம் முழுக்க உள்ள கல்லூரிகளுக்குச் சென்று விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தேன். அந்த சந்தர்ப்பத்தில் அகில உலக மகளிர் நாளுக்காக என்னுடைய தஞ்சாவூரிலுள்ள குந்தவை நாச்சியார் மகளிர் கலைக் கல்லூரியில் ஏதாவது செய்யலாம் என்ற எண்ணம் வந்தது... அந்தக் கல்லூரிதான் தஞ்சாவூரில் பெயர் பெற்ற பெண்கள் கல்லூரி... அதுமட்டுமல்ல அங்கு என்னுடைய அன்பிற்குரியவள் படித்துவந்தாள். அந்தத் துணிவில்தான் அந்தக் கல்லூரி செல்ல ஆசைப்பட்டேன்.
பொதுவாக என்னைப்போன்ற அழகும் அறிவும் ஒருங்கேபெற்ற இளைஞர்கள் அந்தக் கல்லூரிக்குள் சென்று வருவது சற்று ஆபத்தானதும் கூட...
முன்கூட்டியே அந்தப் பெண்ணிடம் அனுமதி கேட்டு நேரத்தை முடிவு செய்து கொண்டேன். உள்ளுக்குள் சற்று அச்சவுணர்வு இருந்தாலும் வெளியில் யாராலும் கண்டுபிடித்திருக்கவே முடியாது.

குறிப்பிட்ட நேரத்தில் கல்லூரிக்குள் நுழைந்தேன்... மெல்லிய சீட்டி ஒலி... கேலி, கிண்டல் வினோத ஒலிக் குறிப்புகள்...  என்னை நோக்கித்தான்... ஆங்காங்கே மர நிழல்களில் அழகிய ரோசாக்களும், மல்லிகைகளும். சாமந்திப் பூக்களை... பூக்களை மட்டுமே நட்டு வைத்ததைப் போன்று பெண்கள் அமர்ந்திருந்தனர்.
நேரே அலுவலகத்திற்குச் சென்று பெயரைச் சொல்லி யாரைப் பார்க்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டேன். சற்று நேரத்தில் மெல்லிய கொலுசொலி... ஒவ்வொரு நாளும் கேட்கும் ஒலி.. சட்டென ஒலிவந்த திசையை நோக்குவதற்குள் ஒளியென என் அருகில் தன் தோழிகளுடன்.
சரி கல்லூரி முதல்வரைப் பார்த்துப் பேசுவதற்கு முன் கீழே போய்வருவோமா என்றாள். குறிப்பறிந்து கீழே சென்றோம். கல்லூரி உணவகத்தில் சூடான தேநீரும், மசால்வடையும் எங்களைத் தேடி வந்தன. எல்லாமே சொல்லி வைத்தது போன்று நிகழ்ந்தது.
வடை சாப்பிடுமுன் ஒன்றைக் குறிப்பிட வேண்டும்... நான் தனியாக வந்தபோது என்னைக் கேலி செய்தவர்கள் இப்போது ஒரு சிறு ஓசைகூட எழுப்பவில்லை... அப்போதுதான் அவளுக்கு அந்தக் கல்லூரியில் இருந்த மதிப்பை அறிந்தேன்.
வடை சாப்பிட்டுத் தேநீர் அருந்தியபின் ஒப்புக்காக காசு கொடுக்க முயன்றேன். வேண்டாம் வாங்க என்ற ஒரே வார்த்தை... மறுபேச்சு பேசவில்லை பின்தொடர்ந்தேன்.
இரண்டாம் தளத்திலிருந்த கல்லூரி முதல்வர் அறைக்குச் சென்றோம். வருகை தெரிவிக்கப்பட்டது. முதல்வர் அழைத்தார். உள்ளே சென்று அமர்ந்தோம். என்னைப்பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டு மகளிர் நாளுக்காக சில நடவடிக்கைகளைச் செய்ய விரும்புவதைத் தெரிவித்தேன். அனுமதி கொடுத்தார். உடனிருந்தவர்களின் சிறப்பது என்பதைச் சொல்லத் தேவையில்லை... கல்லூரி மாணவத் தலைவி மாதங்கியும், பூங்கொடியும் உடனிருந்தனர். கல்லூரிக்குள் பூங்கொடிக்கு இருந்த செல்வாக்கு மிகவும் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது
பெண்களுக்கான உரிமைகள், பெண் கல்வி முக்கியத்துவம், என ஒருசில சுவரொட்டிகள், துண்டறிக்கைகள். கொடுத்துவிட்டு மாமரத்து நிழலில் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு நன்றி கூறி விடைபெற்றேன்.
சற்றுதூரம் துணைக்கு வரும்படி கேட்டுக் கொண்டேன்... மீண்டும் கேலி கிண்டல் செய்வார்கள் என்ற பயத்தில் இல்லை... இன்னும் சிறிது நேரம் பேசலாமே என்றுதான்...
நான் அந்தக் கல்லூரிக்குள் சென்ற முதல் நிகழ்வு இதுதான். அதன்பிறகு இன்றுவரை அங்கு செல்லும் சந்தர்ப்பம் ஏதும் அமையவில்லை... 

2 comments:

palaniappan a said...

மாணவர் பருவத்தின் நினைவலைகளை அருமையாக நகைச்சுவை கலந்து எழுதியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.
அன்புடன்
பழனி
சிங்கை

இளங்குமரன் said...

மிக்க நன்றி ஐயா... உங்கள் கருத்துதான் முதன் முதலாக வந்துள்ளது. நன்றி.