Wednesday, November 26, 2025

நீண்டகாலச் சேவை விருது. என் பிள்ளைகளுக்குக் காணிக்கை


வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தநாளில் கிடைத்ததற்காகப் பெருமைப்படுகிறேன்.

            25 ஆண்டுகள் சிங்கையில் பணியாற்றியமைக்காக... பிரதமர் விருது. அடுத்த மார்ச்சு வந்தால் 29 ஆண்டுகள் முடிந்து முப்பதாவது ஆண்டு தொடங்கும். இந்தக் கால் நூற்றாண்டு சிங்கப்பூர் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறேன். என் தமிழ்நாட்டுப் பிள்ளைகளின் வாழ்த்தினால்தான் சிங்கப்பூர் வந்தேன்.

            சிங்கப்பூர் வேலை உறுதியானவுடன், வெற்றி மகிழ்வன் (விசய் ஆனந். 7 ஆம் வகுப்பு படித்தபோது நான் தொன்போசுகோ பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தேன். அவனுக்கிருந்த தமிழ் ஆர்வம், அந்த ஆர்வத்திற்கு நான் கொடுத்த ஊக்கம் இரண்டும் கலந்தபோது தன்பெயரை வெற்றிமகிழ்வன் எனத் தமிழ்ப்படுத்திக் கொண்டான். அன்றிலிருந்து இன்றுவரை வெற்றி மகிழ்வன் என்றே அழைக்கிறேன்.) சம்பத், குரு ஆகிய மாணவர்கள் என்னை அழைத்துச் சென்று முழுக்கை சட்டை, கழுத்துப்பட்டி, காலணி (இவை சிங்கப்பூருக்கு அவசியம் என்று நினைத்துநினைத்து, பார்த்துப் பார்த்து வாங்கித் தந்தார்கள். அவர்களின் வாழ்த்து என்னை வாழவைக்கின்றது.

            பூண்டி கல்லூரி மாணவனாக இருந்தபோது 1988 ஆம் ஆண்டு புனித அருளானந்தர் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் பகுதிநேர ஆசிரியராக இருந்தேன். முதலாமாண்டு இரண்டாமாண்டு என இரண்டு வகுப்பிலும் 80 மாணவர்கள். அப்போது என்னிடம் பயின்றவர்களில் என்னைவிட வயதானவர்களும் இருந்தனர். என்மீது மிகுந்த அன்புள்ளவர்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கல்வியியில் படித்தவரை பணியில் அமர்த்தினார்கள். நிருவாகத்தினருடன் சண்டை போட்டு எனக்கு விடைநல்கு விழாநடத்தினர். குறிப்பிட்ட தொலைவிலிருந்து விழாமேடைவரை மலர்த்தூவி அழைத்துவந்தனர். மாணவர் தலைவன் சிறில் சோசப்பு என்பவன் மாணவர்கள் சார்பாக ஒரு சிட்டிசன் கைக்கடிகாரத்தை எண்பது மாணவர்களின் இதயத் துடிப்பையும் உங்கள் கைகளில் ஒப்படைக்கின்றோம் எனக்கூறிக் கட்டிவிட்டான். அந்த மாணவர்களின் அன்பும் எனப் பலப்பல மாணவர்களின் ஆழமான அன்புதான் என்னை இந்த அளவு வளரச் செய்துள்ளது.

            அடுத்து 1990 ஆம் ஆண்டு வெங்கடேசுவரா பள்ளியில் ஓராண்டு பயின்றேன். ஆம் மாணவர்களிடமிருந்து நான் கற்றதும் ஏராளம். இன்றும் அந்த மாணவர்களில் பலரும் என் தொடர்பில் உள்ளனர். இன்றும் என்னை அழைத்துப் பேசுகின்றனர். அவர்களின் அன்பும் ஆசியும்தான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது.

            இந்த இனிய நாளில் அவர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து என்னை வளர்து ஆளாக்கிய அத்தனை மாணவர்களுக்கும் இந்த விருதை அன்புடன் காணிக்கையாக்குகிறேன்.
            பலருடைய பெயர்களையும் குறிப்பிட்டுச் சொல்ல ஆசை. ஆனால் இன்று இந்தப்பதிவை வெளியிட வேண்டும் என்ற காரணத்தால் சுருக்கமாகச் சொல்லிமுடித்துவிட்டேன்.
            சிறப்பாக இந்த வேலை கிடைப்பதற்குக் காரணமாக இருந்த என் கல்லூரிநண்பன் புலவர் கோ. நாகேந்திரனுக்கு சிறப்பு நன்றி.

            மேதகு பிறந்த இந்த நாளில் இந்த விருது கிடைத்ததை நான் மிகப்பெரும் பேறாகக் கருதுகிறேன். நன்றி.



8 comments:

Anonymous said...

மகிழ்ச்சி. சாதனையாளருக்கு எமது வாழ்த்து.

Anonymous said...

வாழ்த்துகள்.... ஐயா.

Anonymous said...

இனிய வாழ்த்து.

Anonymous said...

இனிய வாழ்த்து. .... நாக.இளங்கோவன்

வெற்றிச்செல்வன் said...

மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா! மகிழ்வாக உணர்கிறேன்💐💐💐

Anonymous said...

வாழ்த்துக்கள் சார்

Anonymous said...

இனிய வாழ்த்துகள்

Anonymous said...

அண்ணா இந்த பதிவில் உள்ளதை அப்படியே எங்களிடம் பகிர்ந்து மகிழ்ச்சி அடைவீர்கள் அண்ணா இதை விட இன்னும் அதிகமாகச் செல்வீர்கள் அண்ணா உங்களை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது அண்ணா பழமையை இத்தனை வருடம் கழித்து நினைவில் வைத்து இன்று நடந்தது போல் நினைப்பதற்கு .வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அண்ணா 🙏🙏🙏🙏