Tuesday, April 15, 2025

அம்மா கற்றுக் கொடுத்த பண்டுவம்.



(காலை 8.05)

2010 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். பள்ளி மாணவர்களை அழைத்துக்கொண்டு சுற்றுலா சென்றோம். பாண்டிச்சேரிக்குச் சென்றபோது ஒரு மாணவனுக்கு வயிற்றுப் போக்கு மூன்று நான்கு முறைக்கு மேல் போயிருக்கிறது. என்னிடம் வந்து சொன்னான். அப்போது என்ன சொன்னேன் தெரியுமா? 

அடுத்தமுறை போகும்போது தண்ணீரை அமுக்கிவிடாமல் என்னைக் கூப்பிடு நான் பார்க்க வேண்டும் என்றேன். என்ன ஆசிரியர் இப்படிச் சொல்கிறீர்களே என்றான். டேய் நான் அதைப்பற்றிக் கவலைப்பட மாட்டேன். என்னை அழைத்துக் காட்டு அவ்வளவுதான் என்றேன். அதேபோல் சிறிது நேரத்தில் மீண்டும் அவனுக்கு வயிற்றுப் போக்கு. என்னைக் கூப்பிட்டான். வெட்கத்தோடு ஒதுங்கி நின்றான். நான் பார்த்தேன். உள்ளே நுழைந்தவுடனேயே புளிச்ச வாடை அடித்தது. நான் சிறிதுகூட முகத்தைச் சுழிக்கவில்லை. எட்டிப் பார்த்தேன். நுரை நுரையாக. செரிமானக் கோளாறு என்பதைத் தெரிந்து கொண்டேன். (இரவு நேரம். புதிய இடம் என்பதால் மருத்துவரை போய்ப் பார்ப்பது சிரமம் என்றார்கள். மருத்துவர் கிடைக்கமாட்டார் என்பதுபற்றி நான் கவலைகொள்ளவில்லை. காரணம்  என் அம்மா எனக்குக் கற்றுக் கொடுத்த கை பண்டுவத்தின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை.)

உடனடியாகக் கொஞ்சம் சீரகம் மிளகு வாங்கி நீரில் போட்டுக் கொதிக்கவைத்துக் கொடுக்கும்படி தங்கியிருந்த விடுதியில் கேட்டேன். பத்து நிமிடத்தில் நான் கேட்டது கிடைத்தது. பையனை எழுப்பிச் சூடாகக் கொஞ்சம் குடிக்க வைத்தேன். அருகிலேயே அமர்ந்து 15-20 நிமிடங்களுக்கு ஒருமுறை என மூன்று நான்கு முறை குடிக்க வைத்தேன். நான் சொல்வது வரை வேறு எதுவும் சாப்பிட வேண்டாம் அமைதியாகப்படுத்து ஓய்வெடு என்றேன். நன்றாகத் தூங்க ஆரம்பித்தவுடன் நானும் அங்கேயே படுத்துக் கொண்டேன். மருந்து கொடுத்தபின் இரவில் தொல்லையில்லாமல் தூங்கினான். காலையில் தெளிவாகிவிட்டான். அம்மா கற்றுக் கொடுத்த மருத்துவம் வென்றது.  சிங்கப்பூரில் என் பிள்ளைகளுக்கு உடல் நலம் கெட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதே இல்லை. சிறு காய்ச்சல், தலைவலி, உடல்வலி என்றால் அடுப்படிக்குத்தான் செல்வேன். உயர்தரமான மருந்து நம் சமையலறையில் இருக்கும்போது எனக்கென்ன கவலை?

சிங்கப்பூர் வந்த புதிது. என் வீட்டில் ஒருவன் தங்கியிருந்தான். பெயர் தென்றல். தஞ்சாவூரைச் சேர்ந்தவன்தான். காலையிலிருந்து அவன் நடமாட்டத்தையே காணவில்லை. இரவு அவன் அறையை மெல்லத்திறந்து பார்த்தேன். சுருண்டு படுத்துக் கிடந்தான். என்னடா என்ன ஆச்சி என்றேன். குளிருது அண்ணே என்று பேசவே முடியாமல் பேசினான். தொட்டுப் பார்தேன். காய்ச்சல் மிக அதிகமாக இருந்தது. இரவு நேரம் என்பதால் தனியார் மருத்துவமனைக்குத்தான் செல்லமுடியும். அவன் சம்பாத்தியம் மிகவும் குறைவு என்பதால் மருத்துவமனைக்குச் செல்ல அவனுக்கு விருப்பமில்லை. வெளிநாட்டில் வேலை செய்ய வரும் பலரும் தங்களை வருத்தித் துன்பப்படுத்திக் கொண்டு பொருளீட்டித்தான் தாயத்தில் உள்ள உறவினர்களுக்குச் செய்கின்றனர். ஆனால் உறவினர்களின் எண்ணம் வேறுமாதிரி உள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் பணத்தை மரத்திலிருந்து பறித்து அனுப்புகிறார்கள் என்று நினைக்கின்றனர். (என் ஆதங்கம் கொஞ்சம் தலைகாட்டிவிட்டது. பொறுத்தருளவும்.)

ம்... எங்கு விட்டேன். காய்ச்சலிலா? அட காய்ச்சல்தான் இன்னும் விடவில்லையே. கைவசம் இருந்த கோடாலித் தைலத்தை எடுத்து நன்றாகக் கை கால் உடல் முழுவதும் சூடுபறக்கத் தேய்த்துவிட்டேன். மீண்டும் போர்வையை எடுத்து நன்றாகப் போர்த்திவிட்டேன். அப்படியே சற்று வெளியே சென்று கொஞ்சம் வேப்பிலையைத் தேடிப் பறித்துவந்தேன். ஒரு கைப்பிடி வேப்பிலை, பத்து மிளகு, ஒரு பங்கு சீரகம், ஒரு பங்கு ஓமம் எல்லாவற்றையும் மண்சட்டியில் போட்டுத் தீய்த்து இரண்டு சொம்பு தண்ணீர்விட்டுக் காய்ச்சினேன். (இதற்காகவே மண்சட்டி தஞ்சாவூரிலிருந்து பாதுகாப்பாக வாங்கிவந்து வீட்டில் வைத்திருக்கிறேன்.) மூன்றில் ஒருபங்காகச் சுண்டியதும் எடுத்து வடிகட்டி கொஞ்சமாகக் குடிக்க வைத்தேன்.

கோடாலி தைலம் தேய்த்துவிட்டுக் கியாழம் கொடுத்ததும் நன்றாக வியர்த்துக் கொட்டியது. அருகிலிருந்து நன்றாகத் துவட்டிவிட்டேன். ஒருமணி நேரங்கழித்து வடித்த சோற்றில் கொஞ்சம் போட்டு மிளகு சீரகம் கொஞ்சம் போட்டு நன்றாக வேகவைத்து கஞ்சி வைத்துக் குடிக்கக் கொடுத்தேன்.

விருந்தும் மருந்தும் மூன்று வேளை தானே. மெல்ல எழுந்து அமர்ந்தான். மறுநாள் வேலைக்குக் கிளம்பிவிட்டான். குளிர்காய்ச்சலில் நடுக்கிக் கொண்டிருந்தவன் தெளிவாக எழுந்து வேலைக்குச் சென்றதைப் பார்த்தபோது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

2 comments:

Anonymous said...

அருமை சார். இதுபோன்ற கைப்பக்குவங்களை நாங்கள் இன்று வரை பின்பற்றுகிறோம். ஏதேனும் ஒன்று என்றால் உடனே மருத்துவமனையை நாடுவதில்லை. அனைத்து தாய்மார்களுக்கும் நன்றி

Anonymous said...

அருமை